1. லிபியா பெருவெள்ளம்
கடந்த செப்டம்பர் மாதம் புயல், பெருவெள்ளம் காரணமாக லிபியா நாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவே 2023-ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிகப் பெரிய இயற்கை பேரிடர் ஆகும்.
தெற்கு ஆப்பிரிக்காவின் மத்திய தரைக்கடல் பகுதியில் லிபியா நாடு அமைந்துள்ளது. உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள லிபியாவை, கடந்த செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி டேனியல் புயல் கடுமையாக தாக்கியது. அப்போது மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால், கிழக்கு லிபியா பகுதியில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அந்த நதியில் கட்டப்பட்டுள்ள 2 அணைகள் உடைந்தன. இதன் காரணமாக டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
கடற்கரை நகரமான டெர்னாவில், சுனாமிபோல புகுந்த வெள்ளநீர் அங்கிருந்த கட்டடங்களை அடித்துச் சென்றது. அதிகாலை 3:30 மணியளவில் ஏற்பட்ட இந்த பெருவெள்ளம் டெர்னா என்றொரு நகரத்தைத் தடமே இல்லாமல் அழித்துவிட்டது.
இதனால் வீடுகள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். பலர் வெள்ளத்தில் சிக்கிக் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர்.
டேனியல் புயல், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றின் காரணமாக, 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2. மிக்ஜாம் புயல்
கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் காரணமாக, வெளுத்து வாங்கிய கனமழையால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
அந்தமான் அருகே உருவாகி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, கடந்த டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும், வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது.
மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த டிசம்பர் மாதம் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியுள்ள பாபட்லாவிற்கு அருகே மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது. இதனால், ஆந்திரா கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இடைவிடாது பெய்த அதிகனமழையால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தாழ்வான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், வீடுகளில் இருந்த மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட மின்சாதன பொருட்களும், முக்கிய ஆவணங்களும், ஆடைகளும் நீரில் மூழ்கி நாசமாகின. மேலும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
வீடுகளைச் சூழ்ந்த வெள்ளத்தால், இரண்டு, மூன்று நாட்கள் மின்சாரம், பால், தண்ணீர், உணவு என்று எதுவும் கிடைக்காமல், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
3. தென் மாவட்ட கனமழை
கடந்த டிசம்பர் மாதம் 17, 18-ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட 4 மாவட்டங்களில் பெய்த அதிகனமழை, வெள்ளப்பெருக்கால் 35 பேர் உயிரிழந்தனர்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த டிசம்பர் மாதம் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கனமழை வெளுத்து வாங்கியது.
நான்கு மாவட்டங்களிலும் வரலாறு காணாத வகையில், பெய்த கனமழையால், பெரும்பாலான சாலைகளையும், குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்தன. இதனால், வீடுகளில் இருந்த மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்களும், புத்தகங்களும், முக்கிய ஆவணங்களும், ஆடை, அணிகலன்களும் என அனைத்தும் நாசமானது.
பால், உணவு, தண்ணீர் எதுவும் இல்லாமல் மக்கள் கடுமையாக சிரமப்பட்டனர். மின்சாரம், இணைய சேவை துண்டிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது.
திருநெல்வேலியில் கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெய்த அதி கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி ஆங்காங்கே சிலர் அடித்துச் செல்லப்பட்டனர்.
நான்கு மாவட்டங்களிலும் வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால், 35 பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்து 355 குடிசைகள் முழு சேதம் உட்பட 3 ஆயிரத்து 700 குடிசைகள் பாதிக்கப்பட்டன. 170 கான்கிரீட் வீடுகள் சேதமடைந்தன. இதுதவிர 318 பசு, எருமை மாடுகள், 2 ஆயிரத்து 587 ஆடுகள், 41 ஆயிரத்து 500 கோழிகள் இறந்தன. மேலும், 4 மாவட்டங்களிலும், 1 இலட்சத்து 83 ஆயிரம் ஹெக்டோ் பயிா்கள் பாதிக்கப்பட்டன.