மணிப்பூர் மாநிலத்தில் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தால் மீண்டும் பதற்றமான நிலை உருவாகி இருக்கிறது.
மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக, கடந்த மே மாதம் இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்தது. இது கலவரமாக மாறியதில் 100-க்கணக்கானோர் உயிரிழந்தனர். இதன் பிறகு, மத்திய, மாநில அரசுகள் நடத்திய பேச்சுவார்த்தைத் தொடர்ந்து, அங்கு படிப்படியாக அமைதி திரும்பி வந்தது.
இந்த நிலையில், போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தால் மீண்டும் பதற்றமான நிலை உருவாகி இருக்கிறது. அதாவது, மணிப்பூர் மாநிலத்தில் படிப்படியாக அமைதி திரும்பி வந்தாலும், அங்கு காவல்துறையினர் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், ரோந்து சென்ற காவல்துறை வாகனங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், கமாண்டோ படை வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது அவர், அஸ்ஸாம் ரைஃபில்ஸ் முகாமில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே, துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து மொரெ நகரில் 2 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. இதையடுத்து, மணிப்பூருக்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் விரைந்தனர். அங்கு, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், இன்று பிற்பகல் 3.30 மணி முதலே மணிப்பூரில் கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொரே பகுதியின் புதிய நுழைவு வாயில் மற்றும் சானோவ் கிராமம் ஆகிய இடங்களில் இத்துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவுகிறது.