1. துருக்கி நிலநடுக்கம்
கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி அதிகாலை துருக்கியில் ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவே 2023-ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிகப் பெரிய இயற்கை பேரிடர் ஆகும்.
துருக்கியில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.
துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது. வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டடங்கள் நொடிப்பொழுதில் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன.
இதேபோல், நிலநடுக்கத்தால், அண்டை நாடான சிரியாவில் பல ஆயிரம் கட்டடங்கள் இருந்த இடம் தெரியாமல் இடிந்து தரைமட்டமாகின.
நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால், பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாடுகளிலேயே அகதிகளாகினர்.
2. மொராக்கோ நிலநடுக்கம்
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் கடந்த செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி மொராக்கோவின் சுற்றுலா நகரமான மாரகேஷ் பகுதியில், 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மாரகேஷுக்கு தென்மேற்கே 71 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அட்லஸ் மலை பகுதியில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
2 முறை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், மாரகேஷ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் உட்பட பல்வேறு கட்டடங்கள் சீட்டு கட்டுகள் போல் சரிந்து தரைமட்டமாயின. இந்த கட்டட இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கிக் கொண்டு உயிரிழந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
3. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்
கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டட இடிபாடுகளில் சிக்கி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியான ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதான இந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் ஜிண்டா ஜன் மற்றும் கோரியான் மாவட்டங்களில் 12 கிராமங்கள் முற்றிலும் அழிந்து விட்டன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சுமார் 20 கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
4. சீனா நிலநடுக்கம்
வடமேற்கு சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டட இடிபாடுகளில் சிக்கி சுமார் 150 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் வடமேற்கு பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் கிங்காய் மாகாணத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது.
இது கான்சூ மாகாணத்தின் ஜிஷிஷான் கவுன்ட்டியில் உணரப்பட்டது. மேலும், கிங்காய் மாகாணமும் பாதிக்கப்பட்டது. இதனால், இரு மாகாணங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டன.
நிலநடுக்கத்தால், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. ஏராளமான வீடுகளில் விரிசல் அடைந்தன.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 150 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.