வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் இந்தியாவின் பிரதமராக வருவார் என்று மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி நம்பிக்கை தெரிவித்தார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை, தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் ராம்நகரில் உள்ள நாமலகுண்டுவில் பா.ஜ.க. தலைவர்களுடன் அமர்ந்து மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியும் கண்டுகளித்தார்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும், மாநில பா.ஜ.க. தலைவருமான ஜி.கிஷன் ரெட்டி, “மன் கி பாத்தின் 108-வது எபிசோடை கேட்டோம். இந்த நிகழ்ச்சிக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்கள் மற்றும் சமூகத்தின் பொருளாதார முன்னோக்குகள் பற்றி பிரதமர் பேசுகிறார்.
ஒவ்வொரு மாதமும் தனது நாட்டில் இருக்கும் மில்லியன் கணக்கான மக்களுடன் பேசும் உலகின் ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டுமே. மேலும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, உலக அளவில் நாட்டின் கவுரவத்தை உயர்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
பிரதமர் மோடியின் அரசு பல நலத் திட்டங்களைச் செயல்படுத்தி ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தி வருகிறது. ஆகவே, வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ஹாட்ரிக் சாதனை படைத்து, மீண்டும் நாட்டின் பிரதமராக வருவார்.
2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி ஸ்ரீராம ஜென்மபூமி கோவிலில் ஸ்ரீராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதை கொண்டாடுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். ஆகவே, அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்” என்றார்.