ஹௌதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணைகளை அமெரிக்கா மீண்டும் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. கடந்த 3 நாட்களில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2-வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில், 1,200 பேர் உயிரிழந்த நிலையில், இஸ்ரேல் இராணுவம் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இத்தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய் இருக்கிறது. மேலும், இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 22,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்போரில் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும், ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
அதன்படி, ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். மாறாக, ஹௌதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் வரும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த நவம்பர் மாதம் இஸ்ரேலில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு இந்தியாவுக்கு வந்த கப்பலை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர்.
அதேபோல, கடந்த வாரம் சௌதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு 25 இந்திய பணியாளர்களுடன் மங்களூருவை நோக்கி வந்த கப்பல் மீது செங்கடல் பகுதியில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செங்கடல் பகுதியில் வந்த ஒரு கப்பல் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இதனை அமெரிக்க இராணுவப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக பென்டகன் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணையை அமெரிக்க இராணுவப் படை மீண்டும் சுட்டு வீழ்த்தி இருக்கிறது. கடந்த 3 நாட்களில் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய 2-வது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.