அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தமிழக ஆளுநர் ஆர.என்.ரவிக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்றைய தினம் நண்பகல் 12.45 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.
பகவான் ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளிப் பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அன்றைய தினம் நாட்டு மக்கள் அனைவரின் இல்லங்களிலும் தீபம் ஏற்றிக் கொண்டாடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
இந்நிலையில், இராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இன்று வழங்கப்பட்டது. விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலத் தலைவர் ஸ்ரீ.ஆண்டாள் சொக்கலிங்கம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் சென்னை மாநகரத் தலைவர் ஸ்ரீ.சந்திர சேகர் ஆகிய இருவரும் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ், ஸ்ரீ ராமர் கோவில் படம் மற்றும் அட்சதையை ஆளுநரிடம் நேரில் வழங்கினர்.