ஜனவரி 10 ஆம் தேதி காந்திநகரில் நடைபெறவுள்ள குஜராத் குளோபல் உச்சி மாநாட்டில் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலாத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அரபிக் கடலில் மூழ்கிய துவாரகா நகரம் குறித்து இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்ததில் தலைமையேற்று நடத்திய அலோக் திரிபாதி எழுதிய நூலில், மிகப்பெரிய துறைமுகமாக துவாரகா இருந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் கல் நங்கூரங்கள் கிடைத்தன.
பிரம்மாண்ட சுவர், வட்ட வடிவிலான கல் அமைப்பு, வெண்கலம், செம்பு, இரும்பு, மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனை, கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வு செய்ததில் சுமார் 7,500 ஆண்டுகள் முதல் 9,000 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கக்கூடும் என பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
இந்நிலையில் குஜராத் சுற்றுலா துறை முதன்மை செயலாளர் ஹரித் சுக்லா, ” அரபிக் கடலில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரை பார்வையிட சிறப்பு நீர்மூழ்கியை தயாரிக்க மும்பையை சேர்ந்த மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த நீர்மூழ்கி கப்பலில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும்.
ஒரு நேரத்தில் 30 பேர் நீர்மூழ்கியில் பயணம் செய்யலாம். இதில் 24 சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். அவர்களுடன் 2 மாலுமிகள், 2 நீச்சல் வீரர்கள், ஒரு வழிகாட்டி, ஒருதொழில்நுட்ப நிபுணர் பயணம் செய்வார்கள். அவசர கால தேவைக்கான மருந்துகள், ஆக்சிஜன் முகக்கவசம், ஸ்கூபா உடைகள் உள்ளிட்ட உயிர் காக்கும் கவசங்கள் நீர்மூழ்கியில் இருக்கும்.
கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருக்க அதிநவீன தொலைத்தொடர்பு வசதிகள் அமைக்கப்படும். கடலுக்கு அடியில் 300 அடி ஆழத்தில் நீர்மூழ்கி பயணம் செய்யும். சுற்றுலா பயணிகள் துவாரகா நகரின் அழகை ரசிக்க நீர்மூழ்கியில் கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கப்பட்டிருக்கும்.
துவாரகா நகரம் மட்டுமன்றி கடல்வாழ் உயிரினங்களையும் கண்டு ரசிக்க முடியும். வரும் கிருஷ்ண ஜெயந்தி அல்லது தீபாவளி பண்டிகையின்போது நீர்மூழ்கி ஆன்மிக சுற்றுலா திட்டம் தொடங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜனவரி 10 ஆம் தேதி காந்திநகரில் நடைபெறவுள்ள குஜராத் குளோபல் உச்சி மாநாடு நிகழ்ச்சியில் நீர்மூழ்கிக் கப்பல் சுற்றுலாத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.