நமது வருங்கால சந்ததியினரின் குணாதிசயத்தை நல்வழிப்படுத்த பகவான் ஸ்ரீராமர் போதனைகள் நமக்குத் தேவை. இதை, நம்மால் செய்ய முடியும் என்று கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறினார்.
டெல்லி ரங் பவன் ஆடிட்டோரியத்தில் “ராம் மந்திர் ராஷ்டிர மந்திர் ஏக் சாஜி விரஸ்ட்” (ராமர் கோவில் ராஷ்டிர கோவில் ஒரு பொதுவான பாரம்பரியம்) என்ற புத்தகத்தை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) தலைவர் அலோக் குமார் மற்றும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொருளாளர் கோவிந்த் கிரி மகராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆரிப் முகமது, ஆதி சங்கரரின் போதனைகள் குறித்தும், சமுதாய நலனுக்காகவும், உலகம் ஒரே குடும்பமாக மாற அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் பேசினார்.
மேலும், பகவத் கீதையைப் பற்றிப் பேசியவர், நிகழ்வில் கலந்துகொண்டவர்களுடன் பகவான் இராமரின் உபதேசங்களையும் பகிர்ந்து கொண்டார்.
“இன்று ஒவ்வொரு நாட்டிலும் பல அணுகுண்டுகள் உள்ளன. அது உலகை அழிக்கப் போதுமானது. இந்த உலகம் பல தொகுதிகளாகப் பிரிந்து கிடக்கிறது. அதை ஒன்றிணைக்கக் கூடிய ஒரு செய்தி தேவை.
நமது வருங்கால சந்ததியினரின் குணாதிசயத்தை நல்வழிப்படுத்த பகவான் ஸ்ரீராமர் போதனைகள் நமக்குத் தேவை. இதை, நம்மால் செய்ய முடியும்” என்றார்.