ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டட இடிபாடுகளில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜப்பானின் மேற்கு பகுதியில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால், ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள இஷிகாவா, நிகாட்டா, டயோமா, உள்ளிட்ட மாகாணங்களின் பல்வேறு பகுதிகள் குலுங்கின. அதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. ஜப்பானின் தலைநகர் டோக்கியோ வரை நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால், அப்பகுதியில் இருந்த கட்டடங்கள், வீடுகள் குலுங்கின. பல வீடுகளில் விரிசல் விழுந்தது. மேலும், சில கட்டடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதால், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இஷிகாவா மாகாணத்தில் உள்ள வாஜிமா நகர் பகுதியில் சில இடங்களை சுனாமி தாக்கியது.
90 நிமிடங்களில் 21 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால், ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி சுமார் 30 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானின் வடகிழக்கு பகுதியில், 9.0 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், எழுந்த சுனாமியால், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஜப்பான் சந்தித்த மிகப் பெரிய உயிரிழப்பு ஆகும்.