கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி வரை, வங்கிகள் மூலம் 97 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டன. அவற்றுக்குப் பதில் புதிதாக ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் 19-ஆம் தேதி, 2000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன் பின், கடந்த மே 19-ஆம் தேதி, 2,000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
அதன்பிறகு, ஒரு வாரம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஆனாலும், 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் செல்லுபடியாகும் என இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி வரை, வங்கிகள் மூலம் 97 சதவீதம் 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2023-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
கடந்த டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி, ரூபாய் 9 ஆயிரத்து 330 கோடி மட்டுமே புழக்கத்தில் இருந்தது. அதாவது, புழக்கத்தில் இருந்த 97.38 சதவீத நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று கூறப்பட்டுள்ளது.