அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் மூலவர் குழந்தை இராமர் சிலை வரும் 17-ம் தேதி அயோத்தியில் நகர்வலம் வருகிறது.
பா.ஜ.க. அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, அயோத்தியில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றையதினம் மூலவர் குழந்தை இராமர் சிலை கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது.
‘பிராண பிரதிஷ்டை’ என்கிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும், நாடு முழுவதும் இருந்து 10,000 முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்த சிலை, கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படவிருக்கும் குழந்தை இராமர் சிலையை காண மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வமும், எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
எனவே, மூலவர் குழந்தை இராமர் சிலையை வரும் 17-ம் தேதி உலகுக்குக் காட்ட கோவில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அதன்படி, இராமர் சிலை அயோத்தியில் நகர்வலமாக எடுத்துச் செல்லப்படவிருப்பதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்திருக்கிறார்.
கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் வளாகத்திலும் அயோத்தி நகரில் வால்மீகி சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்புப் பகுதியிலும் அட்சதை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த சம்பத் ராய் இதுகுறித்து கூறுகையில், “கோவில் கருவறையில் பாலராமர் சிலையை நிறுவும் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி 22-ம் தேதி பிற்பகல் 12.20 மணிக்கு நடைபெறும்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சுற்று வட்டாரங்களிலும் மக்கள் அதிகம் கூடும் சந்தைகளிலும் பக்தர்கள் ஆரத்தி எடுத்தும், பிரசாதம் வழங்கியும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மாலையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு பக்தர்கள் தங்கள் வீடுகளில் ஸ்ரீராம ஜோதி என்னும் தீபமேற்றி வழிபாடு செய்யவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வேண்டுகோளை பிரதமர் நரேந்திர மோடியும் நாட்டு மக்களிடம் தெரிவித்திருக்கிறார்” என்றார்.