கோவையில் 10 -க்கும் மேற்பட்ட இடங்களில், இன்று காலை முதல் பல்வேறு பிரபலங்களின் வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் மிகவும் பிரபலமானது எலன் இன்டஸ்ட் நிறுவனம். இந்த நிறுவனம் மோட்டார் பம்ப் தயாரிக்கும் நிறுவனம் ஆகும்.
எலன் இண்டஸ்ட்ரி நிறுவனரான விக்னேஷ் என்பவர் சைமா அமைப்பில் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில், கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள எலன் இண்டஸ்ட்ரி உரிமையாளர் விக்னேஷ் வீட்டில் இன்று காலை 8 மணி முதல் 5-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல, கோவை காளப்பட்டி அருகே கிரீன் பீல்ட் ஹவுசிங் என்ற பிரபல கட்டுமான நிறுவனத்திலும், வருமானவரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கிரீன் பீல்ட் ஹவுசிங் நிறுவனத்துக்குச் சொந்தமான கருமத்தம்பட்டி மற்றும் கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், கிரீன் பீல்ட் ஹவுசிங் நிறுவன ஊழியர் ஒருவரை, வங்கிக்கு அழைத்துச் சென்று, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் மட்டும் இன்று காலை முதல் 10-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனை நாளை அல்லது நாளை மறுநாள் வரை தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது.
வரி ஏய்ப்பு புகாரின் பேரில், இந்த சோதனை நடைபெற்று வருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.