உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், நான்கு பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ள முடிவு செய்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா, 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. போரில் உக்ரைனின் பல நகரங்களை ரஷ்யா கைப்பற்றியது.
இந்த போரினால் இரு நாடுகளும் பல்வேறு இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. போர் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்த உலகமும் கடும் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதை அடுத்து, போரை முடிவுக்குக் கொண்டு வர, நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா சரமாரியாக ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், உயரமான கட்டடங்களும், பெரிய சாலைகளும் கடுமையாக சேதமடைந்தன. இதில், நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும், காயமடைந்த 25-க்கும் மேற்பட்டோரை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். அவர்களில் சிலருடைய நிலமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
முன்னதாக, பல ஏவுகணைகள் தலைநகரை நோக்கி வருவதாக உக்ரைனின் விமானப்படை கூறியது. இதை அடுத்து உக்ரைனின் தலைநகரான கிய்வில் சரமாரியான வெடிச்சத்தங்கள் கேட்டன. உக்ரைனில் வான் எச்சரிக்கைகள் எழுப்பப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஏவுகணை தாக்குதல் நடந்தது.
குடியிருப்பு கட்டடங்கள் உட்பட பல்வேறு சாலைகளில், ராக்கெட்டுகளின் பல துண்டுகள் காணப்படுவதாக இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. கின்சல் ஏவுகணைகளை ரஷ்யா ஏவியது என்று தெரிவிக்கப்பட்டது. தலைநகரின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மேயர் விட்டலி கிளிட்ச்கோ கூறினார்.