சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஈரான் ஆகிய 5 நாடுகளும் அதிகாரப்பூர்வமாக பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர்களாகின.
பிரிக்ஸ் என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்த கூட்டமைப்பாகும். இந்த அமைப்பின் உச்சி மாநாடு கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது.
அப்போது, பிரிக்ஸ் அமைப்பை விரிவாக்கம் செய்யவிருப்பதாகவும், விருப்பமுள்ள நாடுகள் இணையலாம் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும், 2024 ஜனவரி 1-ம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கை அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் மற்றும் அர்ஜென்டினா ஆகிய 6 நாடுகள் உறுப்பினராக விருப்பம் தெரிவித்தன. இந்த சூழலில், அர்ஜென்டினாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
எனவே, புதிய அதிபரான சேவியர் மிலே, பிரிக்ஸ் விண்ணப்பத்தை வாபஸ் பெற முடிவு செய்தார். காரணம், புதிய அதிபர் சேவியர் மைலியின் கொள்கைகள் அமெரிக்காவை மையமாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ஜனவரி 1-ம் தேதியான நேற்று முதல் சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, எத்தியோப்பியா, ஈரான் ஆகிய 5 நாடுகளும் பிரிக்ஸ் அமைப்பில் அதிகாரப்பூர்மாக உறுப்பினராகி இருக்கின்றன.
இந்த நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் 2024-ம் ஆண்டுக்கான தலைமை ஏற்றிருக்கும் ரஷ்யா, அக்டோபர் மாதம் கசான் நகரில் உச்சி மாநாடு நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது. இக்கூட்டத்தில் புதிதாக உறுப்பினராகி இருக்கும் 5 நாடுகளும் பங்கேற்கின்றன.
இந்த உச்சி மாநாட்டின்போது ரஷ்யா 200-க்கும் மேற்பட்ட பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டிருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்து உச்சி மாநாட்டில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலம், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பில் புதிய வேகத்தையும் புதிய ஆற்றலையும் செலுத்த முடியும்.
புதிய பிரிக்ஸ் உறுப்பினர்களுடன் இந்தியா மிகவும் ஆழமான மற்றும் வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது. இரு தரப்பு ஒத்துழைப்பில் புதிய பரிமாணங்களும் சேர்க்கப்படும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக மக்கள்தொகையில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையில் 42% பிரிக்ஸ் நாடுகள் ஒன்றாக உள்ளன. இவை உலகப் பொருளாதாரத்தில் 26%-க்கும் அதிகமான பங்கைக் கொண்டிருக்கின்றன.
மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 23 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உள்ளது. பிரிக்ஸ் நாடுகள் உலகின் 30% நிலப்பரப்பையும், 18% உலக வர்த்தகத்தையும் கட்டுப்படுத்துகின்றன.
தற்போது, சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இணைந்திருப்பதால், பிரிக்ஸ் அரபு உலகின் மிகப்பெரிய மற்றும் வலுவான பொருளாதாரங்களை உள்ளடக்கி இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, இந்த ஆண்டு 40-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.