இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலியா மகளிர் அணி தொடரை வென்று கோப்பையை கைப்பற்றியது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
அதன் மூன்றாவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 16 பௌண்டரீஸ் உட்பட 119 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீராங்கனையான அலிசா 4 பௌண்டரீஸ் 3 சிக்சர்கள் என 82 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக், அலனா கிங் 26 ரன்களும், சதர்லேண்ட் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கார்ட்னர் 30 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 338 ரன்களை எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயங்கா படேல் 3 விக்கெட்களும், அமன்ஜோத் கவுர் 2 விக்கெட்களும், தீப்தி சர்மா, மற்றும் பூஜா வஸ்த்ரகர் தலா 1 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய யாஸ்திகா பாட்டியா 6 ரன்களிலும், மற்றொரு தொடக்க வீராங்கனையான மந்தனா 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் 19 ரன்களும், ஜெமிமா 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, தீப்தி சர்மா 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய 32வது ஓவர் முடிய அனைத்து விக்கெட்களையும் இழந்து 148 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஜார்ஜியா வேர்ஹாம் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மேகன் ஷட், அலனா கிங் மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஆஷ்லே கார்ட்னர் 1 விக்கெட்டை எடுத்தார்.
இதனால் ஆஸ்திரேலியா அணி 190 ரன்கள் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த போட்டியில் ஆட்ட நாயகி மற்றும் இந்த தொடரின் நாயகி ஆகிய இரண்டு விருதும் ஆஸ்திரேலியா அணியின் ஃபோப் லிட்ச்ஃபீல்ட் அவர்களுக்கு வழங்கப்பட்டது.