பாகிஸ்தானில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் வீடு உட்பட 3 சொத்துகள் வரும் 5-ம் தேதி ஏலம் விடப்படுகின்றன. இதன் ஆரம்ப விலை 19.20 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் அபு சலீம் உட்பட பல்வேறு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால், இத்தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட முக்கியப் புள்ளியான மும்பையைச் சேர்ந்த தாவூத் இப்ராஹிம், வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவானார். தற்போது, பாகிஸ்தானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இதையடுத்து, இந்தியாவில் உள்ள தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான சொத்துகளை, மத்திய அரசு கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்தது. இவற்றில் 11 சொத்துகள் கடந்த 9 ஆண்டுகளில் ஏலம் விடப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், சிறு வயதில் தாவூத் இப்ராஹிம் வசித்து வந்த ரத்தினகிரியிலுள்ள வீடு உட்பட 3 சொத்துகள் வரும் 5-ம் தேதி ஏலம் விடப்பட உள்ளன. இந்த சொத்துகளின் ஆரம்ப விலை 19.20 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.