ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அச்சமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. பைசாபாத்தில் நள்ளிரவு 12.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பைசாபாத்தின் கிழக்கு பகுதியிலிருந்து 126 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 80 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டது.
இதை அடுத்து, பைசாபாத்தில் நள்ளிரவு 12.55 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது. பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 140 கிலோமீட்டர் தொலைவில், 100 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பைசாபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இதற்கிடையே, புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால், இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
















