சுரங்க முறைகேடு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், அவரது ஆலோசகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். முதல்வரான இவரிடமே சுரங்கத்துறையும் உள்ளது.
இந்த சூழலில், அவரது உதவியாளர் பங்கஜ் மிஸ்ராவுக்கு முறைகேடாக சுரங்க ஒப்பந்தம் ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ. வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.
மேலும், சுரங்க முறைகேட்டில் சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால், ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், இன்று ஹேமந்த் சோரனின் பத்திரிகை ஆலோசகரான அபிஷேக் பிரசாத் என்ற பிந்து வீடு உட்பட 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, சஹேப்கஞ்ச் துணை கமிஷனர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, ஹேமந்த் சோரன் மத்திய ஏஜென்ஸிக்களின் விசாரணையை எதிர்கொண்டு வருவதால், தனது மனைவியை முதல்வராக்க இருப்பதாக பா.ஜ.க. கூறி வருகிறது. ஆனால், இதை ஹேமந்த் சோரன் மறுத்து வருகிறார்.