அர்ஜன்டினாவை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி-யின் ஜெர்சி எண் 10-க்கு அந்நாட்டு கால்பந்து வாரியம் ஓய்வை அளித்துள்ளது.
கிரிக்கெட் என்று சொன்னாலே இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் நினைவில் வருது போன்று கால்பந்து என்று சொன்னாலே நம் நினைவில் வருவது அர்ஜென்டினா தான் அதற்கு முக்கிய முக்கிய காரணம் என்றால் லியோனல் மெஸ்ஸி தான்.
ஆம், அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் தான் லியோனல் மெஸ்ஸி. இவருக்கு உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
1986-க்கு பிறகு 36 ஆண்டுகள் கழித்து 2022ஆம் ஆண்டில் அர்ஜெண்டினா அணியை தலைமை தாங்கி உலகக் கோப்பை பெற்று தந்தார் மெஸ்ஸி. அர்ஜென்டினா அணியில் 1980களில் ஸ்டார் வீரராகவும், உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட டியாகோ மரடோனா இருந்தார். அவர் 1986 உலகக் கோப்பை தொடரை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
மரடோனா போல் உலக அளவில் புகழ்பெற்ற வீரராக இருந்து வரும் மெஸ்ஸி, மரடோனாவை போன்ற அணிக்கு தலைமை தாங்கி நீண்ட நாள் கனவான உலகக் கோப்பையையும் பெற்று தந்தார்.
இதையடுத்து லியோனல் மெஸ்ஸி அடுத்த உலகக் கோப்பை தொடர் விளையாடுவது சந்தேகம் என்று இருந்து வரும் நிலையில், அவர் அணிந்திருக்கும் ஜெர்சி எண் 10-யை இனி வேறொரு வீரர் அணியாதபடி, அதற்கு ஓய்வு அளிக்க அர்ஜெண்டினா கால்பந்து அமைப்பு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்தின் தலைவர் கிளாடியோ டாபியா கூறியதாவது, “தேசிய அணியில் இருந்து மெஸ்ஸி ஓய்வு பெற்ற பின்னர், அவர் அணிந்த ஜெர்சி எண் 10-யை வேறு எந்த வீரரும் அணிவதற்கு அனுமதிக்க மாட்டோம். மெஸ்ஸிக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஜெர்சி எண் 10க்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. இது நாங்கள் அவருக்கு செய்யும் சிறிய விஷயமாக உள்ளது
முன்னதாக, அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பை பெற்று தந்த ஸ்டார் வீரரான டியாகோ மரடோனா இதே ஜெர்சி எண் 10-யை தான் அணிந்திருந்தார். இதையடுத்து அவருக்கு பெருமை சேர்க்க ஜெர்சி எண் 10-க்கு ஓய்வு அளிக்க அர்ஜெண்டினா கால்பந்து சங்கம் முடிவு செய்தது.
ஆனால் 2002 உலகக் கோப்பை தொடரின்போது எண் 1 முதல் 23 வரையில் பொறிக்கப்பட்ட ஜெர்சிகளை அனைத்து வீரர்களும் அணியலாம் பிபா விதிமுறையில் தெரிவிக்கப்பட்டதால் அப்போது அர்ஜெண்டினா கால்பந்து சங்கத்தால் இதனை செயல்படுத்த முடியவில்லை.
இதைத்தொடர்ந்து ஜெர்சி எண்10-யை அணிந்த மெஸ்ஸி, உலகமே வியக்கும் வீரராகவும், பல்வேறு சாதனைகளை படைத்தவராகவும் இருந்து வரும் நிலையில் மரடோனாவை போல் மெஸ்ஸிக்கும் பெருமை சேர்ககும் விதமாக ஜெர்சி எண் 10க்கு ஓய்வு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.