அரசு பெண் ஊழியர்கள், தங்களுக்கான ஒய்வூதியத்தை பெற கணவருக்கு பதிலாக, குழந்தைகளின் பெயரை முதன்மை வாரிசுதாரராக பரிந்துரைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அரசாங்க பணியில் உள்ள பெண் ஊழியர்கள் தங்களுக்கான ஒய்வூதியத்தை பெற கணவருக்கு பதிலாக, குழந்தைகளின் பெயரை முதன்மை வாரிசாக இனி பரிந்துரைக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சிவில் சேவைகள் (ஓய்வூதியம்) விதிகள், 2021 இன் விதி 50 ஆனது, ஒரு அரசு ஊழியர் அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இறந்த பிறகு அவரது வாரிசுதாரர்கள் குடும்ப ஓய்வூதியம் பெற வழிவகை செய்கிறது.
அந்த வகையில் அரசு ஊழியர் அல்லது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் இறந்த பிறகு அவரது சார்பிலான குடும்ப ஓய்வூதியமானது, முதல் வாரரிசுதாரராக கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும். ஒரு வேலை அவர்கள் இல்லை என்றால் மட்டுமே அந்த குடும்ப ஓய்வூதியம் இரண்டாவது வாரிசுதாரரக்கு செல்லும்.
இந்நிலையில், அந்த விதிமுறைகளில் பெண் ஊழியர்களுக்கு என ஒரு பிரத்யேக, மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை (DoPPW) விதிகளைத் திருத்தி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரு பெண் ஊழியர் தனது குழந்தை/குழந்தைகளை குடும்ப ஓய்வூதியத்திற்கான முதன்மை வாரிசுதாரர்களாக பரிந்துரைக்கலாம்.
”இந்தத் திருத்தம், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் அல்லது இந்திய தண்டனையின் கீழ் உள்ள வழக்குகளில், விவாகரத்து மனு அல்லது மனு தாக்கல் செய்த அனைத்து வழக்குகளிலும், ஒரு பெண் அரசு ஊழியரின் குடும்ப ஓய்வூதியம் கணவருக்கு மாற்றாக தகுதியான குழந்தைக்கு வழங்க வழிவகை செய்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.