கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமெடி கொலை வழக்கு தொடர்பாக, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 31 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனை நடத்தி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் சுக்தேவ் சிங் கோகமெடி. ராஷ்ட்ரீய ரஜபுத்திர கர்னி சேனா பிரிவின் தலைவராக இருந்த இவர், கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி ஜெய்ப்பூரிலுள்ள தனது வீட்டில் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென வீட்டுக்குள் புகுந்த 3 பேர், சுக்தேவ் சிங் கோகமெடியை துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு கோகமெடியின் பாதுகாவலரும் மர்ம நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், கோகமெடியும், ஒரு மர்ம நபரும் உயிரிழந்தனர்.
இக்கொலை சம்பவத்தில் வன்முறை கும்பல்களின் தொடர்பு இருப்பதால், மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து, சந்தேக நபர்களிடம் என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டது.
இந்த விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் 31 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே, இந்தக் கொலை தொடர்பாக டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சுக்தேவ் சிங் கோகமெடியை சுட்டுக் கொலை செய்த மர்ம நபர்கள், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நிதின், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித் ரத்தோட் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, நிதினுக்கும், ரோகித்துக்கும் அடைக்கலம் அளித்த ரம்வீர் சிங் என்பவரை போலீஸார் டிசம்பர் 9-ம் தேதி ஜெய்ப்பூரில் கைது செய்தனர். இந்த சூழலில், பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் உள்ள விடுதியில் பதுங்கியிருந்த நிதின், ரோகித் ஆகியோர் டிசம்பர் 10-ம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்களுக்கு துணையாக இருந்த உத்தம் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து ராஜஸ்தான் போலீஸார் கூறுகையில், “கர்னி சேனா தலைவர் சுக்தேவ் கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருக்கிறது. அக்கும்பலைச் சேர்ந்த ரோகித் கடோரா வெளிநாட்டில் பதுங்கி இருக்கிறார். அவரது உத்தரவின் பேரில்தான் நிதினும், ரோகித் ரத்தோட்டும் சேர்ந்து சுக்தேவை கொலை செய்திருக்கிறார்கள்.
அதேசமயம், பாலியல் வன்கொடுமை வழக்கில் ரோகித் ரத்தோட் சிறை செல்ல சுக்தேவ் காரணமாக இருந்திருக்கிறார். இதனால், கொலையாளி ரோகித் ரத்தோட் மற்றும் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் இடையே ஏற்கெனவே முன்பகையும் இருந்திருக்கிறது.
இக்கொலை தொடர்பாக நிதின், ரோகித், உத்தம் சிங் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் நிதின் என்பவர் முன்னாள் இராணுவ வீரராவார்.
வெளிநாட்டில் பதுங்கியுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ரோகித் கடோரா குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். முழுமையான விசாரணைக்குப் பிறகே கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும்” என்றனர்.