குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதிக்கு முன்னதாகவே, புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிகள் திட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் ஆகிய 3 புதிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார்.
இந்த மசோதாக்கள், விவாதத்துக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. பின்னர், இந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டன. அவருடம் மேற்கண்ட மசோதாக்களுக்கு டிசம்பர் 25-ம் தேதி ஒப்புதல் அளித்தார். ஆகவே, அம்மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், மேற்கண்ட புதிய 3 சட்டங்களையும் ஜனவரி 26-ம் தேதிக்குள் அமலுக்குக் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகவே, இது தொடர்பாக காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மேற்கண்ட 3 சட்டங்கள் அறிவிக்கப்பட்டவுடன், போலீஸ் அதிகாரிகள், புலனாய்வாளர்கள் மற்றும் தடயவியல் துறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு பயிற்சித் திட்டம் தொடங்கும். இப்பயிற்சியானது. இச்சட்டங்களைச் செயல்படுத்துவதை உறுதிசெய்வதற்கும், நியாயமான, நேரக்கட்டுப்பாடு மற்றும் ஆதார அடிப்படையிலான விசாரணை மற்றும் விரைவான விசாரணையை உறுதி செய்வது தொடர்பானதாக இருக்கும்.
இவர்களுக்கு பயிற்சி அளிக்க பல்வேறு துறைகளைச் சேர்ந்த 3,000 அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். இந்த செயல்முறை பயிற்சியாளர்கள் பயிற்சித் திட்டம் என்று அழைக்கப்படும். 9 மாதங்கள் முதல் 1 வருடத்திற்குள் 90 சதவிகிதம் பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இப்பயிற்சி தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே ஆலோசனை நடத்தி இருப்பதாகவும், இப்பயிற்சி போபால் அகாடமியில் அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தவிர, பெரும்பாலான பதிவுகள் எலெக்ட்ரானிக் அல்லது டிஜிட்டலாக இருக்கும் என்பதால் ஆன்லைன் பொறிமுறையை உறுதி செய்வதற்காக சண்டிகரில் ஒரு மாதிரி அமைப்பு இருக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
புதிய சட்டங்களின்படி, ஜீரோ எஃப்.ஐ.ஆர்., இ-எஃப்.ஐ.ஆர்., குற்றப்பத்திரிகை ஆகியவை மின்னணு வடிவத்தில் பதிவுகளை உருவாக்குதல் மற்றும் வழங்குதலாகும். அதாவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் தகவல் வழங்கப்படும். அதேபோல, பாதிக்கப்பட்டவருக்கு 3 ஆண்டுகளுக்குள் நீதி கிடைக்கும்.
மேலும், காவல்துறை அதிகாரிகள் 90 நாட்களுக்குள் டிஜிட்டல் முறையில் தகவல் அளிக்க வேண்டும். தவிர, தடயவியல் சான்றுகள் மீது கவனம் செலுத்தப்படும். குற்றங்கள் நடந்த இடங்களைப் பார்வையிடவும், 7 ஆண்டுகள் அல்லது 7 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்படும் வழக்குகளில் கட்டாயம் வீடியோகிராபி மற்றும் தடயவியல் ஆதாரங்களை சேகரிக்கவும், 900 எஃப்.எஸ்.எல். வேன்கள் அனைத்து காவல் மாவட்டங்களுக்கும் வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையின்போது, ஆதாரங்களை பதிவு செய்தல், காவல்துறையால் தேடப்படும் அல்லது பறிமுதல் செய்யப்படும் முழு செயல்முறையின் மின்னணு சாதனங்கள் மூலம் வீடியோகிராஃபி, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் ஆடியோ மற்றும் வீடியோ மின்னணு வழிமுறைகள் மூலம் இச்சட்டங்களின்படி பதிவு செய்யப்படலாம்.