கடந்த 2-ஆம் தேதி தங்கள் நாட்டின் வான் பகுதியில் நான்கு சீன உளவு பலூன்கள் பறந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 1949-ஆம் ஆண்டு சீனாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்த போது, பல தீவு கூட்டங்களை உள்ளடக்கிய தைவான் தங்களை தனிநாடாக அறிவித்துக் கொண்டது. ஆனால் அதை ஏற்க மறுக்கும் சீனா, தைவான் இப்போதும் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என கூறி, சொந்தம் கொண்டாடி வருகிறது.
எனவே, தைவானை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர, சீனா பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக படைபலத்தைப் பயன்படுத்தவும், தயங்க மாட்டோம் என்று தைவானை மிரட்டி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில், தைவானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருகிறது. இது சீனாவை ஆத்திரமடைய செய்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி தங்கள் வான்பகுதியில் 4 சீன பலூன்கள் பறந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
தைவான் விமானப்படைத் தளத்தின் முக்கிய இடமான சிங் சுவான் காங்கின் தென்மேற்கில் மூன்று பலூன்கள் முறையே, 105 கடல் மைல்கள், 160 கடல் மைல்கள் மற்றும் 159 கடல் மைல்கள் தொலைவில் பறந்ததாக கூறப்படுகிறது.
பலூன்கள் பின்னர் பல்வேறு இடங்களில் மறைந்துவிட்டதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பலூன்கள் சீனாவின் உளவு பார்க்கும் பலூனாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஜனவரி 13-ஆம் தேதி தைவான் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், சீனாவின் 4 பலூன்கள் தைவான் வான் பகுதியில் ஊடுருவிய சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு தைவான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தைவான் இராணுவமும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்க வான்வெளியில் சீனாவின் பலூன் ஒன்று பறந்தது. இது உளவு பார்க்கும் பலூன் என்று கூறி அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.