பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், கண்காணிப்புக் குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
முருகனின் ஆறுப்படை வீடுகளில், மூன்றாம் படை வீடாக பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, திருவிழா மற்றும் விஷேச நாட்களில் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிரிவலப்பாதையை வலம் வருவது வழக்கம். முக்கியமாக கார்த்திகை மாதம் தொடங்கி தைப்பூசம், பங்குனி உத்திரம் என ஆறு மாதக்காலம், கிரிவலப்பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டமாகவே இருக்கும். கிரிவலப்பாதை முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், கிரிவலப்பாதையில் பக்தர்கள் செல்வதற்கு கடும் சிரமமாக உள்ளது.
இந்நிலையில், கோவில் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில், கண்காணிப்புக் குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும், பழனி கிரிவலப்பாதைகளில் ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால், உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. கிரிவலப்பாதையில் தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பை அனுமதிக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஜனவரி 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.