இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வதோதராவில் தயாரிக்கப்பட்ட 108 அடி நீள அகர்பத்தி அயோத்தியை சென்றடைந்தது.
அயோத்தி இராமஜென்ம பூமியில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
அதேசமயம், அயோத்தி இராமர் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பூஜைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில், ஸ்ரீராமர் மற்றும் சீதா தேவியின் சிலைகளை வடிப்பதற்காக 2 ஷாலிகிராம் கற்கள் கடந்த 2023 ஜனவரி மாதம் நேபாளத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோல, தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து “ஜெய் ஸ்ரீராம்” என்று பொறிக்கப்பட்ட 620 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட மணி அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், ராஜஸ்தான் கைவினைஞர்களால் 8 அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட பளிங்கு சிம்மாசனமும் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், சத்ய பிரகாஷ் ஷர்மா என்பவர், 30 கிலோ எடையுள்ள 4 அடி நீள சாவியுடன், 10 அடி உயரம், 4.5 அடி அகலம் மற்றும் 9.5 அங்குல தடிமன் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய பூட்டை வடிவமைத்து அனுப்பி இருக்கிறார். அதேபோல, குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 5,000 அமெரிக்க வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட நெக்லஸை வழங்கி இருக்கிறார்.
இந்த நிலையில்தான், குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து 108 அடி நீளம், 3.5 அடி அகலத்தில் தயாரிக்கப்பட்ட அகர்பத்தி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அகர்பத்தி 3,000 கிலோ கிர் பசுவின் சாணம், 91 கிலோ கிர் பசு நெய், 280 கிலோ தேவதாரு மர மரம், 376 கிலோ குகல், 280 கிலோ தால், 280 கிலோ ஜாவ், 370 கிலோ கொப்ரா கிரஷ் மற்றும் 425 கிலோ ஹவன் பொருட்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
3,500 கிலோ எடையுள்ள இந்த அகர்பத்தி, ட்ரெய்லரில் வதோதராவில் இருந்து அயோத்திக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. வதோதராவில் உள்ள தர்சாலியில் வசிக்கும் விஹாபாய் பர்வாத், கடந்த 6 மாதங்களாக முயற்சி செய்து இந்த அகர்பத்தியை தயாரித்திருக்கிறார்.
இவர் ஏற்கெனவே, 111 அடி நீளமான அகர்பத்தியை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.