சென்னை விமான நிலையத்தில் ரூ.6.5 கோடி மதிப்பிலான, 11 கிலோ கிராம் எடை கொண்ட தங்கத்தை, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் ஒரு சிலர் தங்கள் உடமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம், போதைப்பொருள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் உட்பட பல பொருட்களைக் கடத்தி வருகின்றனர். இதனை கண்டறிந்து சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கையில் இருந்து நேற்று பயணிகள் விமானம் ஒன்று, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 2 பெண் பயணிகள் உட்பட 5 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களைத் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய சோதனையில், உள்ளாடைகள் மற்றும் உடலுக்குள் தங்கப் பசைகள் மற்றும் சிறிய அளவிலான தங்கத் துண்டுகள் மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
இதேபோல், இலங்கையிலிருந்து, நேற்று வந்த மற்றொரு பயணிகள் விமானத்தில், 1 பெண் உட்பட 3 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் தங்கப்பசைகள் மற்றும் தங்கக்கட்டிகள் கடத்தி வந்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இரண்டு விமானங்களில் வந்த 8 பயணிகளிடம் இருந்து, ரூபாய் 6 கோடியே 50 இலட்சம் மதிப்பிலான, 11 கிலோ கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், தங்கம் கடத்தி வந்த 8 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.