தமிழகத்தில் இருந்து சென்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களால் எந்தப் பயனும் இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
சுவேதா நதிக்கரையில் அமைந்திருக்கும் காசி விஸ்வநாதர், தம்மம்பட்டியில் உள்ள 1000 வருடங்கள் பழமையான உக்கிர கதலி நரசிம்ம ஸ்வாமி கோவில், ஒரு புறம் பச்சைமலை, மறுபுறம் கொல்லிமலை என இயற்கை அழகு நிறைந்த பகுதி தம்மம்பட்டி.
தம்மம்பட்டி மரச்சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. 3000 ரூபாய் முதல் 4 லட்ச ரூபாய் வரையிலான சிற்பங்கள், இங்கு மிகவும் நேர்த்தியுடனும் பொறுமையுடனும் உருவாக்கப்படுகின்றன. தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர தமிழக பாஜக முயற்சிகள் மேற்கொள்ளும்.
தமிழகத்துக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளில், 10.76 லட்சம் கோடி ரூபாய், நமது மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகத்திற்கு நமது பாரதப் பிரதமர் வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று, கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ளது.
63,828 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 4,49,970 வீடுகளில் குழாயில் குடிநீர், 3,01,532 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,78,408 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,20,539 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,90,151 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், 6,682 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் சேலம் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
கூலமேடு ஜல்லிக்கட்டு, தமிழகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. ஜல்லிக்கட்டு, காட்டுமிராண்டி விளையாட்டு என கேலி செய்து, காங்கிரஸ் திமுக கூட்டணி அரசால் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு இன்று மீண்டும் தமிழகத்தில் நடைபெறக் காரணம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.
திமுக தனது 2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து 30 மாதங்கள் கடந்தும், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
கடந்த ஒன்பது ஆண்டுகளில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, உலக அரங்கில் நமது நாட்டை உயர்த்தியிருக்கிறது. பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறோம். ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாமல் நேர்மையான ஆட்சி நடந்து வருகிறது. அனைத்துப் பயனாளிகளுக்கும் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் இருந்து சென்ற திமுக பாராளுமன்ற உறுப்பினர்களால் எந்தப் பயனும் இல்லை. தொகுதி பக்கமோ, பாராளுமன்றப் பக்கமோ செல்வதும் இல்லை, தொகுதிப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதும் இல்லை.
மக்களுக்குக் கொடுக்கும் பணத்தை, மக்களை அலைக்கழித்து திமுக கட்சிக்காரர்கள் வழியாகக் கொடுக்கிறார்கள். வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழக மக்களுக்காக உழைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மக்கள் விரோத திமுக காங்கிரஸ் கூட்டணியை முழுவதுமாகப் புறக்கணிக்க வேண்டும். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகமும் துணை நிற்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.