திமுக அமைச்சர் பொன்முடிக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை ஆத்தூர் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
வசிஷ்ட முனிவருக்கு, சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி தந்த காயநிர்மாலேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கும் அற்புதமான பூமி. ஆத்தூர் அருகே உள்ள கோனேரிப்பட்டியில் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன.
தமிழகக் கடற்கரைப் பகுதியையும் மைசூரையும் இணைக்கும் வணிகப் பெருவழியில் ஆத்தூர் கணவாயும் ஒன்று. இந்திய தொல்லியல் அளவீட்டு நிறுவனத்தால், பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்ட கோட்டைகளில் ஆத்தூர் கோட்டையும் ஒன்று. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட 6 அடி அதிகமான, உலகிலேயே உயரமான 146 அடி உயர முத்துமலையில் முருகன் கோவில் அமைந்துள்ள தொகுதி.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், 2014 ஆம் ஆண்டுக்கு முன்பை விட இரண்டரை மடங்கு அதிக நிதி கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகம் பெற்றுள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை அமைக்க கடந்த ஆட்சி வழங்கிய நிதியை விட 3 மடங்கு அதிக நிதி, தமிழகத்தில் ரயில்வே துறையை நவீனப்படுத்த கடந்த ஆட்சியை விட 2.5 மடங்கு அதிக நிதி,என கடந்த 9 வருடங்களில் 10.76 லட்சம் கோடி ரூபாய் நமது மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளது.
தமிழகத்திற்கு நமது பாரத பிரதமர் வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ளது. 63,828 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 4,49,970 வீடுகளில் குழாயில் குடிநீர், 3,01,532 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,78,408 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம் 1,20,539 பேருக்கு, 1,90,151 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், சேலம் மாவட்டத்திற்கு 6682 கோடி ரூபாய் முத்ரா கடனுதவி என மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஜவ்வரிசி மூலம் வர்த்தகம் நடைபெறுகிறது. புகழ்பெற்ற இந்த ஜவ்வரிசிக்கு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு மார்ச் 2023 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கியது.
2019 ஆம் ஆண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், 351 மாசடைந்த நதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முதலிடம் ஆத்தூர் தொகுதியில் உள்ள வசிஷ்ட நதி. தமிழகத்தில் உள்ள கூவம், அடையாறு, நொய்யல், தாமிரபரணி என்று ஒவ்வொரு நதியும் இன்று மாசுபட்ட நதிகளாக உள்ளன. இதனைச் சரி செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆத்தூர் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள், பாலம் இல்லாததால் வசிஷ்ட நதியில் தண்ணீரில் இறங்கி ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகள், ஆற்றை கடக்க சிரமப்படுவதோடு, சில நேரங்களில் தண்ணீரில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர். இங்கு ஒரு பாலம் அமைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
திமுக அமைச்சர் பொன்முடிக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக 5 இடங்களில் செம்மண் எடுக்க உரிமம் வழங்கியது தொடர்பாக அவர் மீதும் அவரது மகனான கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் கவுதம சிகாமணி மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடந்து வருகிறது. இதுதான் திராவிட மாடல்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து மக்கள் விரோதச் செயல்பாடுகளை மேற்கொள்ளும் திமுக கூட்டணியை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும், பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராக பொறுப்பேற்க, தமிழகமும் பெரும்பங்கு வகிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.