விமானம் ஏறும்போது தென் ஆப்பிரிக்கா ஆல் அவுட், இறங்கும் போது தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்களை இழந்திருந்தது என சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்ததால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா பெறும் சரிவை சந்தித்துள்ளது.
சரிவை சரி செய்ய இந்திய அணி இரண்டாம் டெஸ்ட் போட்டியில் தீவிரமாக விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 55 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 153 ரன்கள் வரை 4 விக்கெட்கள் மட்டுமே இழந்த இலையில் அதற்கு மேல் 11 பந்துகளில் 6 விக்கெட்கள் விழுந்தது.
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 62 ரன்கள் எடுத்து 3 விக்கெட்களை இழந்துள்ளது. மொத்தமாக நேற்று நடைபெற்றப் போட்டியில் 23 விக்கெட்கள் விழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்றைய போட்டியின் ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் விழுந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார்.
அதில், ” 2024-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே 23 விக்கெட்டுகள் ஒரே நாளில் விழுந்திருக்கிறது. தென்னாப்பிரிக்க அணி ஆல் அவுட்டான போது நான் விமானத்தில் ஏறினேன். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தால் மீண்டும் தென்னாப்பிரிக்க அணியே திரும்பவும் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்த போட்டியில் நான் எங்கு எதை தவறவிட்டேன்? என்று எனக்கு புரியவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.