கேப்டன் மில்லர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி, ராசாவே உன்ன காணாத நெஞ்சு பாடலும் பாடப்பட்டது.
‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. வரலாற்றுப் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பிரம்மாண்டமான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தனுஷ் உள்பட கேப்டன் மில்லர் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் இரண்டு நடிகர்களின் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. முதலாவதாக அண்மையில் மரணமடைந்த நடிகரும், அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இவர் நடிகர் ஷிவராஜ்குமாரின் சகோதரர் ஆவார். இதுமட்டுமின்றி நடிகர் தனுஷ் மேடையில் பேச வரும்போது, கேப்டன் விஜயகாந்தின் மறைவுக்கு பாடல் மூலம் அஞ்சலி செலுத்தினார்.
கேப்டனின் வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தில் இடம்பெறும் ராசாவே உன்ன காணாத நெஞ்சு பாடலை பாடி அஞ்சலி செலுத்தினார். அந்த பாடலை தனுஷ் உடன் சேர்ந்து அங்கு வந்திருந்த ரசிகர்களும் பாடி விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் தனுஷ், விஜயகாந்த் மறைவின் போது புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக லண்டன் சென்றிருந்தார். இதன்காரணமாக விஜயகாந்தின் உடலுக்கு அவரால் நேரில் அஞ்சலி செலுத்த முடியாமல் போனது.