செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா இறுதி எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே சுமார் 3 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இப்போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆகவே, செங்கடலில் செல்லும் இஸ்ரேலுக்குச் சொந்தமான கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஹௌதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், தற்போது செங்கடலில் செல்லும் அனைத்துக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தினர். எனினும், இந்திய போர்க்கப்பல்கள் விரைந்து சென்று அக்கப்பலை பாதுகாப்பாக மீட்டு மும்பை துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. இதேபோல, பல்வேறு நாட்டுக் கப்பல்கள் மீதும் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர்க்கப்பலை செங்கடல் பகுதியில் நிலை நிறுத்தி இருக்கிறது. இக்கப்பல் மூலம் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஏவும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அமெரிக்கா நடுவானிலேயே தடுத்து அழித்து வருகிறது. இதுபோல் பல ஏவுகணை அழித்திருக்கிறது.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, செங்கடலில் வந்த கப்பல் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். ஆனால், அந்த ஏவுகணை மற்றும் ட்ரோன்களை அமெரிக்கா தடுத்து அழித்து விட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் 4 படகுகளில் வந்து அக்கப்பலை வழிமறித்தனர்.
இதையறிந்த அமெரிக்க போர்க்கப்பல் 3 படகுகளை தாக்கி அழித்தது. ஒரு படகு மட்டும் தப்பிச் சென்று விட்டது. அமெரிக்காவின் இத்தாக்குதலில் ஹௌவு கிளர்ச்சியாளர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இதனால், கோபமடைந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நிறுத்த வேண்டும். இல்லையெனில் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.
அதேசமயம், தாக்குதல் தொடர்ந்தால் எந்தவிதமான பதிலடியில் ஈடுபடும் என்பது குறித்து அமெரிக்க உயர் அதிகாரி தெரிவிக்க மறுத்து விட்டார். ஆனாலும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளிடம் இருந்து ஹௌதி கிளார்ச்சியாளர்கள் மற்றொரு எச்சரிக்கையை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவுடன் ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பெல்ஜியம், கனடா, டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்றிணைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.