தமிழ் சினிமாவின் குடும்ப படங்களில் அனைவரின் மனதிலும் என்றும் நிலைத்திருக்கும் படமான மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வந்துள்ளது.
2009ஆம் ஆண்டு ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் தான் மாயாண்டி குடும்பத்தார்.
தமிழ் சினிமாவில் குடும்பப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் ராசு மதுரவன்.
அந்த வகையில் இந்த படமும் நல்ல குடும்பப்படமாக அமைந்தது. திருமணத்துக்குப் பிறகு அண்ணன் தம்பி உறவில் ஏற்படும் சலசலப்பை மையமாக வைத்து இப்படத்தை அழகாக எடுத்திருந்தார் இயக்குநர் ராசு மதுரவன்.
இப்படத்தில் மற்றுமொரு கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதில் அண்ணன் தம்பிகளாக நடித்த தருண் கோபி, கேபி ஜெகன், சீமான், பொன்வண்ணன் ஆகிய நான்குபேருமே இயக்குநர்கள் தான்.
இப்படத்தில் அனைவரும் எதார்த்தமாக நடித்தது மக்கள் மத்தில் எளிதாக கனெக்ட் ஆகா உதவியது. மேலும் இப்படத்தில் மணிவண்ணன் பேசும் ‘டேய் பரமா படிடா’ என்கிற வசனம் இன்றைய டிரெண்டிங் மீம் டெம்பிளேட்டுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது.
இந்த நிலையில், மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் பாகத்தைத் தயாரித்த யுனைட்டெட் ஆர்ட்ஸ் நிறுவனமே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க உள்ளது.
மேலும் இப்படத்தை விஜய் நடிப்பில் வெளிவந்த புதிய கீதை படத்தின் இயக்குநர்க் கே.பி ஜகன்னாத் இயக்குகிறார். இவர் முதல் பாகத்தில் மாயாண்டி கதாபாத்திரத்தின் மகன்களின் ஒருவராக நடித்திருந்தார்.
மேலும் முதல் பாகத்தில் நடித்த அனைவருமே இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.