தமிழகத்தில் ஜாதி அரசியலைப் புகுத்தி, பிரிவினையை உருவாக்கி அரசியல் செய்யத் தொடங்கியது திமுகதான் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில், நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
சரபங்கா நதிக்கரையில் செழிப்பான ஊராக இது உள்ளது. பொதுமக்கள் செலுத்தும் ஜிஎஸ்டி வரியில், 100 ரூபாயில் 50 ரூபாய் மாநில அரசுக்கு நேரடியாகவும், மேலும் 21 ரூபாய் நிதி ஆணையத்தின் மூலமாகவும் நேரடியாக மாநில அரசுக்கே கிடைக்கிறது. 100 ரூபாயில் 71 ரூபாய் மாநில அரசுக்கும், 29 ரூபாய் மத்திய அரசுக்கும் பகிரப்படுகிறது.
அந்த நிதியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பத்தாண்டு கால நல்லாட்சியில், சேலம் மாவட்டத்தில் 63,828 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 4,49,970 வீடுகளில் குழாயில் குடிநீர், 3,01,532 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,78,408 பேருக்கு ரூ. 300 மானியத்துடன் இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,20,539 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,90,151 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், இதுவரை ரூ. 30,000, முத்ரா கடனுதவி 6,682 கோடி ரூபாய் என வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் ஏராளம். 100 ரூபாயில் 71 ரூபாய் பெறும் திமுக அரசு மக்களுக்குச் செய்த நலத்திட்டங்கள் என்ன?
பாஜக குடும்ப அரசியலை எதிர்க்கிறது. தமிழகம் முழுவதுமே இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் ஒரு குடும்பத்தில் இருப்பவர்களே மீண்டும் மீண்டும் பதவிக்கு வருவார்கள்.
சட்டிஸ்கர் மாநிலத்தில் பழங்குடிகளிலிருந்து முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுதான் சமூக நீதி. காலாகாலமாக, தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுகவை, தமிழகத்திலிருந்து அகற்றினால்தான் தமிழகத்தில் ஜனநாயகம் மலரும். தமிழகத்தில் ஜாதி அரசியலைப் புகுத்தி, பிரிவினையை உருவாக்கி அரசியல் செய்யத் தொடங்கியது திமுகதான்.
பிரதமரைப் பொறுத்தவரை, ஏழை ஜாதி, பெண்கள் ஜாதி, விவசாயிகள் ஜாதி, இளைஞர்கள் ஜாதி என நான்கு ஜாதிகள் மட்டும்தான். வேறு ஜாதி வேறுபாடு பிரதமருக்கு இல்லை.
கடந்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தின் கடனை 2.69 லட்ச கோடி ரூபாய் கூட்டியுள்ளது திமுக. இந்த ஆண்டு மார்ச் மாதம் முடியும் போது தமிழகத்தின் மொத்த கடன் 8,34,544 கோடி ரூபாயாக இருக்கும். தமிழகத்தில் உள்ள சுமார் 2.2 கோடி குடும்பங்களின் மீதும் 3.81 லட்ச ரூபாய் கடன் வைத்துள்ளது தமிழக அரசு. மேலும் தமிழகத்தில், திமுகவினர் நடத்தும் சாராய ஆலைகளுக்கு வருமானம் வருவதற்காக, திமுக கட்சிக்காரர்கள் கமிஷன் பெற, என திமுகவினர் சம்பாதிப்பதற்காக மட்டுமே டாஸ்மாக் கடைகளை நடத்தி வருகிறது திமுக. இதனால் ஏற்படும் குற்றச் சம்பவங்களுக்கு திமுக பொறுப்பேற்பதில்லை.
வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத திமுகவை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும். தமிழுக்காக, தமிழ் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தந்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்த, தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.