ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சோபியான் அருகே பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சூடு நடந்ததாக காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தலைவிரித்தாடிய நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு, தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் ஒடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இதற்காக, இராணுவம், துணை இராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் மாநில காவல்துறை அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவினர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடி தீவிரவாதிகளை கைது செய்தனர். அவ்வப்போது நடக்கும் துப்பாக்கி சண்டையில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சோபியான் மாவட்டத்தில் உள்ள சோட்டிகம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக மத்திய பாதுகாப்புப் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர், அப்பகுதியைச் சுற்ற வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதைத்தொடர்ந்து, மத்திய பாதுகாப்புப் படையினரும் திருப்பி சுட்டனர்.
தற்போது தீவிரவாதிகளை தேடும் பணியில் சோபியான் போலீஸ், இராணுவம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர்.