ஆதித்யா எல்-1 தனது இறுதி இலக்கை நெருங்கிக் கொண்டு இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில் ஆதித்யா எல்1 நாளை மாலை எல் 1 புள்ளியை சென்றடைகிறது. நாளை மாலை 4 மணிக்கு எல் 1 புள்ளியின் சுற்றுவட்டப்பாதைக்குள் ஆதித்யா எல் 1 விண்கலம் செலுத்தப்பட உள்ளது.
இந்திய விண்வெளி நிறுவனம், எல்1 புள்ளியில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த முயற்சிப்பது இதுவே முதல் முறையாகும். அந்த புள்ளிக்கு சென்றால் மட்டுமே ஆதித்யா சூரியனை தடையின்றி பார்க்க முடியும்.
பூமி சூரியனைச் சுற்றி வரும்போது, L1 புள்ளியும் சேர்ந்து நகரும். எனவே, ஒளிவட்ட சுற்றுப்பாதையும் பூமியுடன் இணைந்து நகரும் என இந்திய வானியற்பியல் கழகத்தின் இயக்குனர் அன்னபூர்ணி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய தித்யா எல்1 மிஷனின் விண்வெளி வானிலை மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரான திபியேந்து நந்தி, ” நாளை இஸ்ரோ முன்னெடுக்கவுள்ள முயற்சியானது மிகமுக்கியமான செயலாகும். இது விண்கலத்தின் வேகம் மற்றும் பாதையை மாற்றுவதற்காக உந்துதல்களை இயக்கச் செய்கிறது. இதை தவறவிட்டால் அடுத்தடுத்து பல திருத்தங்களை முன்னெடுக்க நேரிடும்” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், ” ஆதித்யா விண்வெளியில் 124 நாட்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. ASPEX இன் PAPA மற்றும் ஒரு கூறு, சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் உட்பட நான்கு கருவிகள், விண்கலத்தின் பயணக் கட்டத்தில் இயக்கப்பட்டு நன்றாக செயற்பட்டு வருகிறது” என்றும் கூறினார்.