அயோத்தி இராமர் கோவில் சிலை பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவுக்காகக் குறிக்கப்பட்டுள்ள முகூர்த்த நேரம் வெறும் 84 நொடிகள் மட்டுமே என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் மதிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
இதையொட்டி, அன்றைய தினம் பகல் 12 மணிக்கு, இராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கோவில் திறப்பு விழா ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இக்கும்பாபிஷேக விழாவை நாடே ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம், இந்த நிகழ்வு வெறும் நொடிப் பொழுது மட்டுமே நடத்தப்படவிருக்கிறது என்பதுதான் ஹைலைட்.
உண்மைதான். அயோத்தி இராமர் கோவில் சிலை பிரதிஷ்டை மற்றும் திறப்பு விழாவிற்காகக் குறிக்கப்பட்டுள்ள முகூர்த்த நேரம் வெறும் 84 நொடிகள் மட்டுமே. இந்த 84 நொடிகள் என்பது மிகவும் புனிதத்துவம் வாய்ந்த, மங்களகரமான நேரமாகும்.
இந்த புனிதமான முகூர்த்த நேரத்தை குறித்துக் கொடுத்தவர்கள் காசி நகரத்தின் தலைசிறந்த பண்டிதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிலை பிரதிஷ்டை நடைபெறுவதற்கு முன்பு யாகங்கள், சிறப்பு ஹோமங்கள் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற உள்ளன.
சிலை பிரதிஷ்டை முடிந்த பிறகு அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 4 வேதங்கள் மந்திரங்கள் ஓதப்பட்டு, மற்ற மத மடங்குகள் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து ஸ்ரீராமஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலா் சம்பத் ராய் கூறுகையில், “அயோத்தி இராமா் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி பிற்பகல் 12.29.08 மணி முதல் 12.30.32 வரை 84 விநாடிகளில் இராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
16 பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது” என்று தெரிவித்தார்.
அயோத்தி கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள குழந்தை இராமர் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மார்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
ராமர் கோயிலில் ஜனவரி 23-ம் தேதி முதல் தரிசனத்துக்காக பக்தா்கள் அனுமதிக்கப்படுவார்கள். நாளொன்றுக்கு 3 லட்சம் பேர் வரை தரிசனம் மேற்கொள்ள வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.