திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தி.நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கட் நாராயணா கோவிலில் 10.5 அடி உயரத்திற்கு ஸ்ரீராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தி.நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கட் நாராயணா கோவிலில் 10.5 அடி உயரத்திற்கு ஸ்ரீராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
நேற்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் இந்த சிலை நிறுவப்பட்டு, திறக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் பெருமாள் கோவிலின் நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ராமர் சிலை, ஒன்றரை அடி உயரமுள்ள பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது.
ராமரின் இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் வைத்து, இடது காலை முன்னே வைத்தபடி கம்பீரமாக மன்னர் கோலத்தில் ராமர் காட்சி தருகிறார். இந்த ராமர் சிலையில் ராமருக்கு உடை, தங்க ஆபரணங்கள், வில் என அனைத்தும் மிகவும் தத்ரூபமாக, காண்போரின் கண்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ராமர் சிலை தெய்வீகமாக முகப்பொலிவுடன் நீல நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை ஏராமானோர் வந்து வணங்கி செல்கின்றனர். கோவிலுக்கு வந்து காண முடியாத பக்தர்களும் சாலையில் செல்லும் போதே பார்த்து ஸ்ரீராமரை தரிசிப்பதற்கு வசதியாக வெளியில் இருந்து பார்த்தாலே தெரியும் வகையில் இந்த ராமர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஜனவரி 4ஆம் தேதி முதல், ஜனவரி 22 ஆம் தேதி வரை ஆன்மிக நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், பஜனை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.