செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல் தொடர்ந்தால், இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இதையும் மீறி வெடிபொருள் அடங்கிய படகை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் வெடிக்கச் செய்திருக்கிறார்கள்.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையே கடந்த 3 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இப்போரில் ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.
எனவே, செங்கடலில் செல்லும் இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், செங்கடல் வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்கள் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, இத்தாக்குதலை தடுக்கும் வகையில், செங்கடலில் அமெரிக்கா தனது போர்க் கப்பல்கள் நிலைநிறுத்தி இருக்கிறது. இதன் மூலம், ஹௌதி கிளர்ச்சியாளர்கள் செலுத்தும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருகிறது. இதேபோல, ஏராளமான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழித்திருக்கிறது.
மேலும், செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஹௌதி கிளர்ச்சியாளர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லையெனில், இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்கா தலைமையிலான 12 நாடுகள் கொண்ட கூட்டுப்படை இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களில் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
அதாவது, ஏமனில் இருந்து ஹௌதி கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களுடன் ஆளில்லா படகு ஒன்றை அனுப்பினர். இந்தப் படகை அமெரிக்கா கடற்படை மற்றும் செங்கடலில் பயணித்த வணிகக் கப்பல்கள் இருந்த 2 மைல் பகுதிக்குள் வெடிக்கச் செய்தனர்.
எனினும், இத்தாக்குதலில் எந்த சேதமும், உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அமெரிக்க கடற்படை தெரிவித்திருக்கிறது.