அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் இராமர் பக்தி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என்று மாநில போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
மேலும், இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பல்வேறு அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் மாநில அரசு பிறப்பித்து வருகிறது.
அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் இன்று முதல் வரும் 22-ஆம் தேதி வரை இராமர் பக்தி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும் என்று மாநில போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.