முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் 9 பேர் உட்பட 68 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் இந்த ஆண்டில் நிறைவடைகிறது.
நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, மக்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகாலம். அதேசமயம், மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். அந்த வகையில், தற்போது மாநிலங்களவை எம்.பி.க்களாக 245 இருந்து வருகின்றனர். இவர்களில் பலரும் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர்களாக இருக்கும் 9 பேர் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 68 பேரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது. அதன்படி, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங், நரைன் தாஸ் குப்தா மற்றும் சுஷில் குமார் குப்தா ஆகிய 3 பேரின் பதவிக்காலம் வரும் 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
அதேபோல, சிக்கிம் மாநிலத்தில் சிக்கம் ஜனநாயக முன்னணி (எஸ்.டி.எஃப்.) கட்சியின் உறுப்பினர் ஹிஷே லச்சங்பா என்பவரின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. டெல்லி மற்றும் சிக்கம் மாநில ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான தேர்தல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, வெளியுறவுத் துறை இணையமைச்சர் வீ.முரளீதரன், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகா் உட்பட 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது.
இது தவிர, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எலமரம் கரீம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பினோய் விஸ்வம், கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் ஜோஸ் கே.மாணி, நியமன எம்.பி.க்களான மகேஷ் ஜெத்மலானி, சோனல் மான்சிங், ராம் செஹகல், ராகேஷ் சின்ஹா ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது.
இதன்படி, நடப்பு ஆண்டில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்கள் காலியாகின்றன. தொடர்ந்து, மகாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களில் தலா 6 இடங்கள், மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் தலா 5 இடங்கள், கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் தலா 4 இடங்கள் காலியாகின்றன.
மேலும், ஒடிசா, தெலங்கானா, கேரளா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் தலா 3, ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 2, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா 1 இடங்களும் காலியாகின்றன.