அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் பங்குபெற நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணாவுடன் 21ஆம் தேதி அயோத்திக்குப் புறப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் அறிவுரைப்படி, கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, அயோத்தி – ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து, கும்பாபிஷேக நிகழ்வுக்குக் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஆர்எஸ்எஸ் தென்னிந்திய அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர் அழைப்பிதழ் வழங்கினர்.
இந்நிலையில், வருகின்ற 22-ம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.
அதற்காக வரும் 21-ம் தேதியே நடிகர் ரஜினிகாந்த் அயோத்திக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அவருடன் மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணாவும் பங்கேற்கின்றனர் என்ற தகவல் வந்துள்ளது.
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முடித்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் வரும் 23-ம் தேதி சென்னை திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.