மேற்கு வங்கத்தில் ரேசன் முறைகேடு தொடர்பாக சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அம்மாநில உள்துறை செயலர் மற்றம் டிஜிபிக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் உணவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அப்போது ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்வதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுதொடர்பாக அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஜோதிப்ரியா மல்லிக்கை கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பாங்கானில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர் ஆதியா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்த சென்றனர். அப்போது வீட்டுக்கு முன் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கியுள்ளனர். மேலும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அமலாக்கத்துறையினரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இதற்கு மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மேற்கு வங்க உள்துறை செயலர் மற்றும் டிஜிபிக்கு அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளார்.
இது கொடூரமான சம்பவம் என தெரிவித்துள்ள அவர், ஜனநாயகத்தில் காட்டுமிராண்டித்தனம் மற்றும் காழ்ப்புணர்ச்சியை தடுப்பது ஒரு நாகரீக அரசின் கடமை என்று தெரிவித்துள்ளார்.ஒரு அரசாங்கம் அதன் அடிப்படைக் கடமையில் இருந்து தவறினால், இந்திய அரசியலமைப்பு தன் கடைமையை செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.