புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு ரசிப்பார்கள்.அந்த வகையில் ஆண்டுதோறும் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் முதல்முதலாக ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கும்.
இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி போட்டி நடைபெற்று வருகிறது. 746 காளைகள், 247 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீறிப்பாய்ந்து செல்லும் காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை பரிசோதிப்பதற்காக கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு)ராமச்சந்திரன் தலைமையில் மருத்துவர்கள் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், காயம் அடையும் காளைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக ஆம்புலன்ஸ் வசதி, காயம் அடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.