இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்றப் போட்டியில் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
அதில் முதல் டி20 போட்டி நேற்று மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.
ஆஸ்திரேலியா மகளிர் அணி 19வது ஓவர் முடிய 141 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 49 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் மற்றொரு வீராங்கனை எல்லிஸ் பெர்ரி 37 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பெத் மூனி 17 ரன்களும், அனாபெல் சதர்லேண்ட் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா மகளிர் அணி 141 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா அணியில் அதிகபட்சமாக டைட்டாஸ் சாது 17 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார்.
இந்திய அணியின் ஸ்ரேயங்கா பட்டேல், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் அமன்ஜோத் கவுர், ரேணுகா சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா, ஷாபாலி வர்மா களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே இருவரும் ஆதிக்ககம் செலுத்தி வந்த நிலையில் இருவரும் அரைசதம் எடுத்தனர். இந்திய அணி 137 ரன்கள் எடுத்து வெற்றி கோட்டை நெருங்கும் சமயத்தில் ஸ்மிருதி மந்தனா 54 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
18வது ஓவரில் இந்திய அணி 145 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஷாபாலி வர்மா 64 ரன்களும், ஜெமிமா 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியா அணியில் ஜார்ஜியா வேர்ஹாம் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனால் இந்திய மகளிர் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மேலும் இப்போட்டியில் ஆட்ட நாயகி விருது 17 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்திய இந்திய அணியின் வீராங்கனை சாதுவுக்கு வழங்கப்பட்டது.