சோமாலியா அருகே கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட லைபீரியா கப்பலை இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சென்னை போர்க் கப்பல் அதிரடியாக மீட்டது. மேலும், அக்கப்பலில் இருந்த 15 இந்தியர்கள், 6 பிலிப்பைன்ஸ் நாட்டினர் என 21 பேரையும் பத்திரமாக மீட்டது.
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் கடற்பகுதியில் சென்ற லைபீரியா நாட்டைச் சேர்ந்த ‘எம்.வி.லிலா நார்ஃபோக்’ என்கிற சரக்குக் கப்பல் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இக்கப்பலில் 15 இந்திய மாலுமிகள் சிக்கி இருப்பதாகத் தகவல் வெளியானது.
இதுகுறித்து இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிநவீன கடலோர ரோந்து விமானம், ஹெலிகாப்டர், ட்ரோன்கள் ஆகியவற்றை பயன்படுத்தி இந்திய கடற்படை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
மேலும், இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். சென்னை போர்க் கப்பலும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றது. பின்னர், கடத்தப்பட்ட லைபீரியா கப்பலை இந்திய கடற்படை நெருங்கியதும், கப்பலை விட்டு வெளியேறும்படி ஹெலிகாப்டர் மூலம் கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து, இந்திய கடற்படை கமாண்டோக்கள் கடத்தப்பட்ட கப்பலுக்குள் நுழைந்தனர். இதைக் கண்டதும் கொள்ளையர் தப்பி ஓடிவிட்டனர். இதன் பிறகு, கப்பலில் இருந்த 15 இந்தியர்கள், 6 பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என 21 பேரை இந்திய கடற்படை பத்திரமாக மீட்டது.
இதுகுறித்து, இந்திய கடற்படை செய்தித் தொடா்பாளா் கமாண்டா் விவேக் மாத்வால் கூறுகையில், “சோமாலியா அருகே லைபீரியா நாட்டுக் கொடியுடன் பயணித்த ‘எம்.வி.லிலா நார்ஃபோக்’ சரக்குக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.
இது தொடர்பாக, பிரிட்டன் இராணுவத்தின் கடல்சார் வத்த்தகப் பிரிவுக்கு கப்பலில் இருந்து அவசரத் தகவல் கிடைத்தது. இத்தகவல் இந்தியாவுடன் பகிரப்பட்டவுடன், கப்பலை மீட்பதற்காக “ஐ.என்.எஸ். சென்னை” போர்க் கப்பல், “பி8ஐ” நவீன கடலோர ரோந்து விமானம், “எம்.கியூ.9பி” ஆளில்லா விமானம் ஆகியவற்றை இந்திய கடற்படை அனுப்பியது.
இதையடுத்து, கடற்படை ரோந்து விமானம் “பி8ஐ” நேற்று கப்பலை நெருங்கி தொடர்பை ஏற்படுத்தியது. மேலும், ‘ஐ.என்.எஸ். சென்னை’ போர்க் கப்பலில் சென்ற கடற்படை கமாண்டோக்கள் கடத்தப்பட்ட கப்பலை இடைமறித்தனர்.
பிறகு, இந்திய கடற்படை கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. தொடர்ந்து, கடத்தப்பட்ட கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்த கமாண்டோக்கள் உள்ளே இருந்த 15 இந்தியர்கள் உட்பட 21 பணியாளர்களையும் பாதுகாப்பாக மீட்டனர்.
ஆனால், கப்பலுக்குள் நடத்திய சோதனையில் கடற்கொள்ளையர்கள் தப்பிச் சென்றது தெரியவந்தது. இந்திய கடற்படை ரோந்து விமானம் விடுத்த கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து கடற்கொள்ளையர்கள் தப்பி இருக்கலாம். மீட்கப்பட்ட 21 பேரும் நலமாக உள்ளனர்” என்று கூறினார்.
இதனிடையே, இந்திய கடற்படை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “சர்வதேச கூட்டாளிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து அந்த பிராந்தியத்தில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்தியா உறுதிபூண்டுள்ளது.
வடக்கு மற்றும் மத்திய அரபிக் கடல், ஏடன் வளைகுடாவின் கடல்சார் பாதுகாப்பை இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணிக்கும். அங்கு இந்திய கடற்படையின் கப்பல்கள், விமானங்கள் தொடா்ந்து கண்காணிப்பில் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.