அயோத்தியை உலகத்துடன் இணைப்பதில் எங்களது அரசு உறுதியாக இருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
இக்கோவில் கும்பாபிஷேகத்துக்கு இந்தியா மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். தவிர, கும்பாபிஷேகத்துக்குப் பிறகும் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
இது ஒருபுறம் இருக்க, அயோத்தி இராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டவுடன், இது ஒரு புகழ்பெற்ற ஆன்மிக சுற்றுலாத் தலமாகவும் விளங்கும். மேலும், இந்தியாவின் மிகப்பெரிய கோவிலாகவும் இருக்கும்.
ஆகவே, இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, அயோத்தியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்தது. இதையடுத்து, அயோத்தியில் ஏற்கெனவே இருந்த இரயில் நிலையம் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது.
அதேபோல, 1,450 கோடி ரூபாய் செலவில் புதிய விமான நிலையமும் கட்டப்பட்டது. இந்த விமான நிலைய முனையக் கட்டடம், 10 லட்சம் பயணிகளை கையாளும் வகையில், 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த விமான நிலைய முனையத்தின் முகப்புக் கட்டடம் அயோத்தி இராமர் கோவில் கட்டடக் கலையை சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதோடு, அயோத்தி இரயில் நிலையத்துக்கு அயோத்தி தாம் இரயில் நிலையம் என்றும், விமான நிலையத்துக்கு மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் என்றும் பெயர் சூட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அயோத்தியில் மேம்படுத்தப்பட்ட இரயில் நிலையத்தையும், புதிய விமான நிலையத்தையும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 30-ம் தேதி திறந்து வைத்தார். மேலும், அயோத்தியில் 15,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில், அயோத்தி இரயில் நிலையத்துக்கு “அயோத்தி தாம் இரயில் நிலையம்” என்றும், விமான நிலையத்துக்கு “மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம்” என்றும் பெயர் சூட்டப்பட்டதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தனது எக்ஸ் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, அயோத்தி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றி, அதற்கு “மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம்” என்றும், அயோத்தி இரயில் நிலையத்துக்கு “அயோத்தி தாம் இரயில் நிலையம்” என்று பெயர் சூட்டும் முடிவுக்கு ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம், நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள பக்தர்களுக்கு பிரதமர் ஒரு புதிய நற்செய்தியை வழங்கி இருக்கிறார்.
இது இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், வெளிநாட்டு யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் உலகளாவிய யாத்திரை தலமாக நகரத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுக்கு பிரதமர் மற்றும் ஒட்டுமொத்த அமைச்சரவைக்கும் நன்றி. ஜெய் ஸ்ரீ ராம்!” என்று தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, இப்பதிவுக்கு பதிலளித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “பகவான் ஸ்ரீராமரின் புனித நகரமான அயோத்தியை முழு உலகத்துடன் இணைக்க வேண்டும் என்பதில் எங்கள் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.
அதேபோல, இங்குள்ள விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதுடன், விமான நிலையத்துக்கு ‘மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம்’ என்றும், இரயில் நிலையத்துக்கு ‘அயோத்தி தாம்’ இரயில் நிலையம் என்றும் பெயரிடும் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நடவடிக்கை, நாடு முழுவதும் உள்ள எங்கள் குடும்ப உறுப்பினர்களின் சார்பாக மகரிஷி வால்மீகி ஜிக்கு மரியாதைக்குரிய அஞ்சலி” என்று தெரிவித்திருக்கிறார்.
प्रभु श्री राम की पावन नगरी अयोध्या को दुनियाभर से जोड़ने के लिए हमारी सरकार कृतसंकल्प है। इसी कड़ी में यहां के एयरपोर्ट को इंटरनेशनल एयरपोर्ट घोषित करने के साथ ही इसका नाम ‘महर्षि वाल्मीकि अंतरराष्ट्रीय हवाई अड्डा, अयोध्या धाम’ रखने के प्रस्ताव को मंजूरी दी गई है। यह कदम महर्षि… https://t.co/xhwQQ9gmb1
— Narendra Modi (@narendramodi) January 5, 2024