நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்தைவிட அயோத்தியில் இராமர் கோவிலுக்கான போராட்டம் மிகப்பெரியது என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி.) தலைவர் ஷரத் ஷர்மா கூறியிருக்கிறார்.
அயோத்தி இராமஜென்ம பூமியில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அன்றையதினம் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது.
வாரணாசியைச் சேர்ந்த தீட்சிதர் லக்ஷ்மி காந்த் தீட்சித், இராம் லல்லாவின் சிலை பிரதிஷ்டைக்கான முக்கியச் சடங்குகளைச் செய்கிறார். நிகழ்ச்சியை முன்னிட்டு, 1008 ஹண்டி மகாயக்ஞமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
விழாவையொட்டி, ஜனவரி 14 முதல் ஜனவரி 22-ம் தேதி வரை அயோத்தியில் அமிர்த மஹோத்ஸவ் கொண்டாடப்படுகிறது. மேலும், கும்பாபிஷேக விழாவிற்கான வேத சடங்குகள் ஜனவரி 16-ம் தேதி தொடங்குகின்றன. ஆகவே, விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இதுகுறித்து வி.ஹெச்.பி. தலைவர் ஷரத் ஷர்மா கூறுகையில், “சுதந்திர இயக்கத்தைவிட இராமர் கோவில் இயக்கம் மிகப்பெரிய இயக்கம். ஏனெனில், இது மதம், கலாச்சாரம் மற்றும் வரலாறு தொடர்பான மக்கள் பங்கேற்ற ஒரு மத இயக்கம்.
இதற்காக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்தனர். இப்போராட்டம் முடிவுக்கு வந்து இராமர் கோவில் கட்டுவதற்கு 500 ஆண்டுகள் ஆனது. ஆகவே, இப்போராட்டத்தை 1947 சுதந்திரப் போராட்டத்தை விட பெரிய இயக்கம் என்று கருதலாம்.
இராம் லல்லாவின் கும்பாபிஷேக விழாவிற்கு மொத்தம் 7,000 அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. தவிர, நாட்டிலுள்ள சுமார் 4,000 துறவிகள் மற்றும் 3,000 பொதுமக்கள் வி.வி.ஐ.பி.க்களாக அழைக்கப்படுகிறார்கள்.
கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழின் முதல் பக்கத்தில் பகவான் இராம் லல்லாவின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது. மேலும், நிகழ்ச்சியின் பல்வேறு விவரங்கள் தேதி வாரியாக குறிப்பிடப்பட்டுள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்த, புராணக் கதைகளைப் பற்றி தற்போதைய தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக, 1949-ம் ஆண்டு முதல் இராமர் கோவில் இயக்கத்தில் பங்குபெற்றவர்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய சிறு புத்தகத்தையும் நாங்கள் வழங்குகிறோம்” என்றார்.