பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை மெட்ரோ இரயில் போக்குவரத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழக அரசிடம் அறிக்கை சமர்பித்துள்ளது.
பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை மெட்ரோ இரயில் போக்குவரத்து குறித்து பரிந்துரை செய்வதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
இதில், மொத்த வழித்தடத்தின் நீளம் 43.63 கி.மீ, 19 இரயில் நிலையங்கள், ரூ 10,712 கோடி மதிப்பிடப்பட்ட செலவாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை மெட்ரோ இரயில் போக்குவரத்திற்கான சாத்தியக்கூறு குறித்து, தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனருமான சித்திக், சென்னை, தலைமைச் செயலகத்தில் அறிக்கையை இன்று சமர்ப்பித்தார்.
இதில், பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் வழித்தடத்தின் எதிர்கால வளர்ச்சி போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பரிந்துரை செய்துள்ளதாகவும், விரிவான திட்ட அறிக்கை, விரிவான சீரமைப்பு ஆய்வுக்குப் பிறகு, மெட்ரோ இரயில் போக்குவரத்திற்கான நிலையங்கள் மற்றும் நிலத் தேவைகள் பற்றிய விவரங்கள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.