இந்திய விண்வெளி நிறுவனத்தின் ஆதித்யா எல் 1 செயற்கைகோள் தற்போது சூரியனின் எல் 1 புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் எனும் எல்-1 புள்ளியில், பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சமமாக இருக்கும்.
அந்தப் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம், சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆராய உள்ளது.
ஏறத்தாழ 127 நாட்கள் பல கட்ட பயணத்தை மேற்கொண்டு ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியை இலக்கில் சரியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி விஞ்ஞானிகள் இந்தப் பணிகளை மேற்கொண்டனர்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த விண்கலம் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும். விண்வெளி துறையில் புதிய மைல் கல்லை இஸ்ரோ நிகழ்த்தியுள்ளது.