171 பயணிகள், 6 பணியாளர்களுடன் நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் கதவுகள் திடீரென திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் அலாஸ்கா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் “737-9 MAX” என்கிற விமானம் போர்ட்லேண்டில் இருந்து கலிபோர்னியாவின் ஒண்டாரியோவுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 171 பயணிகளும், 6 விமான பணியாளர்களும் இருந்தனர்.
இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் நடுப்பகுதியில் உள்ள வெளியேறும் கதவு திடீரென திறந்தது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கதவின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் பதற்றமடைந்தனர்.
உடனடியாக, இதுகுறித்து விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட விமானி, உடனடியாக விமானத்தை போர்ட்லேண்டுக்கே திரும்பியவர், அவசர அவசரமாக தரை இறக்கினார். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் கூறுகையில், “வெளியேறும் கதவு திடீரென விமானத்தில் இருந்து முற்றிலும் விலகி தனியாகச் சென்றது” என்று பதற்றத்துடன் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, அலாஸ்கா நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதன் பிறகு தகவலை பகிர்ந்து கொள்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறது.
இதனிடையே, அலாக்ஸா விமானம் 16,325 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்ததாக கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்திருக்கிறது.
இந்த விமானம் கடந்த அக்டோபர் 1-ம் தேதிதான் அலாஸ்கா நிறுவனத்துக்கு டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது. இந்த விமானத்தை நவம்பர் 11-ம் தேதியில் இருந்து அலாஸ்கா நிறுவனம் வணிகப் பயன்பாட்டில் ஈடுபடுத்தி வந்திருக்கிறது.
இந்த நிலையில், விமானத்தில் பயணித்த பயணிகள், கதவு திறந்திருந்த காட்சியை தங்களது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், இந்த விபத்து குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில், அந்த விமானத்தின் நடுவில் உள்ள ‘எக்ஸிட் டோர்’ பறந்திருப்பதைக் காணமுடிகிறது. வெளியேறுவதற்காக வைக்கப்பட்ட அந்தக் கதவு, பயன்படுத்தப்படாமல் அடைக்கப்பட்டே இருந்திருக்கிறது.
இது குறித்து விமானத்தில் பயணித்த 22 வயது இளைஞர் கூறுகையில், “நான் கண் விழித்ததும் முதலில் பார்த்தது எனக்கு முன்னால் இருந்த ஆக்ஸிஜன் மாஸ்கைத்தான். பின்னர், எனது இடது பக்கம் பார்த்தேன், அந்தப் பக்கம் இருந்த விமானத்தின் கதவு காணாமல் போயிருந்தது. அப்போது நான் இறந்து விடுவேன் என்றுதான் எனக்கு முதலில் தோன்றியது” என்றார்.
மேலும், விமான பாதுகாப்பு நிபுணர் அந்தோணி பிரிக்ஹவுஸ் கூறுகையில், “அந்தப் பயணிகள் எதிர்கொண்ட பயங்கர அனுபவத்தை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.
அச்சம்பவம் பயங்கர சத்தத்துடன் இருந்திருக்கும். காற்று அதிகமாக விமானத்துக்குள் நுழைந்திருக்கும். நிச்சயமாக இது ஒரு பயங்கரமான சூழ்நிலைதான்” என்று தெரிவித்திருக்கிறார்.
போயிங் விமான தயாரிப்பு நிறுவனம் கூறுகையில், “அலாஸ்கா ஏர்லைன்ஸின் ஏ.எஸ்.1282 விமானத்துக்கு நிகழ்ந்த சம்பவம் குறித்து நாங்கள் அறிந்தோம். இதுகுறித்து கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள முயன்று வருகிறோம்.
மேலும், எங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். விசாரணையில் ஒத்துழைப்பு வழங்க போயிங் தொழில்நுட்பக் குழு உதவ தயாராக இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.